மழைக்காலம் தொடங்கி சிலநாட்கள் ஆகிவிட்டது………பூமி பச்சை போர்வை போர்த்திக்கொண்டது….பூமிக்கு குளிரடிக்குமா
22 வருடங்களை பின்னோக்கிப் பார்த்தால் இதுபோல் ஒரு மழையின் தொடக்க காலங்களில் குப்பைமேடுகளிலும், தெருவின் காலியிடங்களிலும் முளைத்து நிற்கும் தக்காளி, பப்பாளி மற்றும் மிளகாய் செடிகளை தேடித்திரிந்த அந்த நாட்கள் …..பசுமையாய் இனிக்கிறது…….
துலுக்கமல்லி என்ற சாமந்தி(செவ்வந்தி) செடிகளைத் தேடி மையத்தான் கோட்டைக்குள் (இடுகாடு) பயத்துடன் சுற்றித் திரிந்த அந்தநாட்கள்……
பிடுங்கி வந்த செடிகளை நட்டுவைத்து பாத்திகட்டி நாள்தோறும் காலை மாலைகளில் தண்ணீர் விட்டு மகிழ்ந்த அந்தநாட்கள்……..
கொடிவிட்ட பீர்க்கங்காய்,புடலங்காய்,பாகற்காய் செடிகள் படர்வதற்கு பந்தல் கட்டிய பவித்ரமான அந்தநாட்கள்……
நட்டுவைத்த செடிகளில் முதலில் பூப்பது, காய்ப்பது உனதா? எனதா? என பந்தயம் கட்டி முதல் பூ, காய் கண்டு பரவசம் அடைந்த அந்தநாட்கள்………..
பப்பாளி செடிவளர்ந்து மரமாகி அதிலிருந்து முதல் பழம் ருசித்த அந்தநாட்கள்……..
பப்பாளியின் செங்காய் பறித்து தோல்சீவி சிறு சிறு துண்டுகளாய் நறுக்கி சிறிது புளிக்கரைசல் தயார்செய்து அவற்றுடன் சுட்ட காய்ந்த குண்டுமிளகாயை பிசைந்து அதில் பப்பாளித்துண்டுகளை இட்டு சிறிதுநேரம் ஊறவைத்து பின் சாப்பிட்ட சுவைமிகுந்த அந்த நாட்கள்……….
இப்பொழுது அந்த இடத்தில் அழகிய வீடு இருக்கிறது….அதைக்காணும் போதெல்லாம் …….அதிலிருந்த பப்பாளிமரம்.,சீமைஒடை, மாதுளை, முருங்கை, மருதாணி,யூகலிப்டஸ், செம்பருத்தி, குரோட்டன்ஸ்,நித்தியகல்யாணி,தக்காளி, மிளகாய்,கறிவேப்பிலை,பீன்ஸ்,பீர்க்கை, பாகற்காய்,புடலங்காய்,பசலைக்கீரை அதில் விளைந்த பழங்களும் காய்களும் அதை உண்ணவந்த பறவைகளும், உறங்கவந்த குருவிகளும்,அதில் மலர்ந்த மலர்களும் மலரில் தேன் உண்ணவந்த வண்டுகளும், வண்ணத்துப்பூச்சிகளும்,அந்த இடத்தில் வளர்ந்த ஆடுகள், கோழிகள்,எலிகள் ,கீரிப்பிள்ளைகள் மற்றும் நீரிறைத்து குளித்து நீர்பாய்ச்சிய அந்த பெரிய கிணறு அனைத்தும் கண்முன் காட்சியாய் விரிகிறது. நிகழ்கால நிஜம் அவற்றுக்கு திரையிடுகிறது.
இவற்றையெல்லாம் மூடி சமாதிபோல் சிமெண்ட் தளமிட்டு ,வீடுகட்டி அதனுள் குடும்பம் வளர்க்கிறோம் இப்பொழுது.
அதன் மொட்டைமாடியில் செடிவளர்க்கமுடிவு செய்து மண்ணை தேடுகிறேன்
அதிர்கிறது மனம் மண்ணைக் காணமுடியவில்லை.தெருவெங்கும் மண்ணை மூடி சமாதிபோல் கான்கிரீட் சாலை.
மண் எடுக்க ஊருக்கு வெளியில் 4 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளேன்.இப்பொழுது புரிகிறது நாம் இயற்கையைவிட்டு நீண்டதூரம் எதிர்த்திசையில் பயணித்துவிட்டோம் என்று. திரும்பிப்பார்க்கிறேன் நல்லவேளை கண்ணுக்கெட்டிய தூரத்தில்தான் இயற்கை.
நான் திரும்பிப்போகிறேன் இயற்கையை நோக்கி ………….
திரும்ப இயலா தொலைவுக்கு போகும்முன்
நீங்களும் திரும்பி வாருங்கள் இயற்கையை நோக்கி…………