Thursday 29 September 2011

விளையாடிய பொழுதுகள் ........

அத்தியாயம்-2 
காச்சிட்டான் கள்ளச்சிட்டான் கள்ளன் வாரான் ஓடிப்போ....ஓடிப்போ......

கை வீசி உனை சிறை பிடித்த கணம் .....

உலகையே வென்றது போல் கூத்தாடியது கபடமில்லா மனம் அந்தநாட்களில்.........

நீள நூல்கொண்டு ,உன் வாலில் கட்டி உயரப்
பறக்கவிட்டு உனை பின்தொடர்ந்தோடிய அந்தநாட்களில்......

மழைக்கு பிந்தியநாட்களில் உன் வருகை....உயரப் பறந்து திரியும் உனை
அடித்து வீழ்த்திட கையில் விளக்குமாத்து குச்சிகளுடன் காத்திருந்த
அந்தநாட்களில்........

ஈ பிடித்து உனக்கு உணவாக ஊட்டிய அந்தநாட்களில்.......

உன் தலை சுண்டி உனது ஆயுளை அறிந்த அந்தநாட்களில்......

இரவில் அடைக்கலமாய் வீட்டிற்குள் வந்த உனை பிடித்து, உம்மாவிடம்
அடிவாங்கிய அந்தநாட்களில்.......

உன் சிறகொடித்து உனை எறும்பு புற்றுக்குள் போட்டு ரசித்த அந்தநாட்களில்.......

ஊசித்தும்பியை பாசித்தும்பிக்கு பசியாறக் கொடுத்த அந்தநாட்களில்.......

கையில் இருந்து கீழே விழுந்த உனை, கோழிகள் ஓடிவந்து கொத்தித்தின்ற
அந்தநாட்களில்.......

மதில் சுவர்களிலும்,செடிகளிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் உன் வால் பிடிக்க, பதுங்கி பதுங்கி வரும்வேளையிலே                                      “காச்சிட்டான் கள்ளச்சிட்டான்
                                              கள்ளன் வாரான் ஓடிப்போ,,,,ஓடிப்போ...” என பாடி உனை விரட்டிவிடும்
                     பால்ய நண்பனை ஜென்மவிரோதியாய் பார்த்த   அந்தநாட்களில்.......

அந்தநாட்களில்.......எங்களது பொழுதுகளை மகிழ்ச்சிகரமாய் ஆக்கிய நீங்கள் எங்களது சந்ததிகளை மகிழ்விக்க வரமாட்டீர்கள் என சத்தியமாய் எங்களுக்கு தெரியாது அந்தநாட்களில்.......

அந்தநாட்களில்.......உங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தோம் நாங்கள்,,,, ஆகையால் வந்தீர்கள் நீங்கள்.
இன்று வரவேற்க யாருமில்லை ......அதனால் நீங்கள் வரவுமில்லை....


ஓ.......

பாசி,கள்ளன்,தோட்டான்,கரிமிலகாய்,குதிரை,மணிலாச்சிட்டான்,மாழ்பழச்சிட்டு,
மயில்வால் தும்பிகளே .......நீங்கள் எல்லாம் எங்கே சென்றுவிட்டீர்கள்...
தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடாதீர்கள்....

புத்தகப்புழுக்களாய் மாறிவிட்ட குழந்தைகளின் குழந்தை உள்ளத்தை
மீட்டெடுக்க எனதருமை தும்பிகளே ....வாருங்கள் ....வாருங்கள்...

காத்திருக்கும் தம்பிகளுக்காக   வாருங்கள்  தும்பிகளே வாருங்கள்........




Thursday 15 September 2011

மற்றொரு மழைக்காலத்தில்....!!!!!!!!........??????

நேற்றுக்கு முந்திய நாட்கள்..........                                                  அத்தியாயம்-1

           மாலைமயங்கும் வேளையிலே  சாலையில் நடக்கையில் சில்லென்று வந்த சுழல்காற்று உடல் தடவி, மனம் வருடி செல்கையில் சுழன்றெழும்பி
பறந்தன சாலையோர தூசுகள் கூடவே என் மனமும்.

                                      தூறல்கள் விழுந்தன.

         மண்ணில் விழுந்த மழைத்துளிகள்   மண்ணின்                   நுண்ணுயிர்களை உயிர்பித்தது.

          என்னில் விழுந்த மண்வாசனை ஆழ்மனதின்
எண்ணங்களை   உயிர்பித்தது.
  
      இடி, என் மனக்குதிரையை வெகுண்டெழுந்து ஓடச்செய்தது
மின்னல், அதற்கு வெளிச்சம் காட்டியது,விரைந்தது......குதிரை.

        செட்டியார் கடையில் இனிப்பு போண்டா தின்று, சுக்கு காபி
குடித்துக் கொண்டு மனக்குதிரையில் எண்ணங்கள் பின்நோக்கி
பயணம் செய்தது.
  
        சாலையில் மழை நின்ற பொழுதும் என் மனச் சோலையில்
தூறல்கள் தொடர்ந்தன.......................................................................................


                                                                                                                       தூறல்கள் தொடரும்



(  இந்த தொடர்,  அவரவர் மனதின் பால்ய கால நுட்மான நினைவுகளை எனது நினைவு என்னும் மயிலிறாகால் வருடி நினைவு பெறச்செய்யும்
சிறு முயற்சி. )
           

Tuesday 13 September 2011

முதல் பயணம்

என்னுடைய வீட்டைப் பொறுத்தவரை அதற்கு சுவர்களோ,மேற்கூரையோ
கிடையாது!!!!!!!    நான் கேட்கிறேன்,
 நம்மில் யார் கைதியாய் இருக்கவிரும்புகிறோம்!!!!!!